Sunday 15 January 2012

இரண்டாயிரம் ஆண்டு அடையாளம்




இரண்டாயிரம் ஆண்டு அடையாளம்


எங்கே அந்த கிராமங்கள்?
எங்கே அந்த பூப்பதியம்?
எல்லா வீட்டு முற்றங்களிலும்
ஓங்கி ஒலித்த பொங்கல் குரல்

கிராமம் என்ற கவிதைநூல்
நகரக் கழிவில் கிழிகிறது
பானை வாயில் பாசமில்லை
பொங்கல் மட்டும் வழிகிறது

திண்ணை என்னும் போதிமரம்
தெருவே வந்து கூடுமிடம்
காணவில்லை பலகையிலே
கடைசியாய் சேர்ந்து கிடக்கிறது

பூசணி பூக்கள் கைபரப்பும்
புல்லும் மஞ்சளும் நிரம்பித்தரும்
வர்ணகோலம் வரைகின்ற
வனிதையை இழுக்கிறது தொலைக்காட்சி

முற்றம் இல்லா வீடுகளாய்
முக்காடு போட்ட கிராமங்கள்
சுற்றம் சூழ இன்றில்லை
சுருங்கச் சொன்னால் தனித்தீவாய்

நீச்சல் உடையில் பேட்டிதரும்
நித்தில நடிகைகள் நிகழ்ச்சியிலே
கொதிக்கும் பொங்கல் பொங்குதம்மா
கொஞ்சம் விளம்பர இடைவெளியில்



மருந்துக் கடைகள் குறைவாக
மதுக் கடைகள் நிறைவாக
மாறும் தமிழர் திருநாட்டில்
பொங்கல் விழாக்கள் போதையிலே

எங்கே அவர்கள் இளைஞர்கள்
எல்லா கிராம கோயில்முகம்
கையில் மைக்கும் மட்டையுமாய்
தமிழர் திருவிழா செய்வாரே

பாதி இளைஞர் வெளிநகரில்
மீதி இளைஞர் அயல்நாட்டில்
ஆனது போக மீதமுள
ஆறஞ்சு பேர்கள் திரையரங்கில்

ஜல்லிக்கட்டு மாடு எல்லாம்
ஜனகர் கொட்டாய் சுவரொட்டியை
அள்ளித் தின்று அலைகிறது
அடடா வீரம் கறுப்புவெள்ளை!

இரண்டு மூன்று புதியபடம்
இடையில் நகைச்சுவை பட்டிமன்றம்
இரண்டாயிரம் ஆண்டு இனத்திற்கு
இதுதான் விழா அடையாளம்


திரும்பப் பழைய பொலிவுடனே
தமிழர் பொங்கல் வருமொருநாள்
பழக்கம் காரணம் இக்கவியை
வழக்கம் போலவே முடிக்கின்றேன்