Saturday, 30 April 2011

வள்ளுவத்திற்கு வாய்த்த - ஒரு நிலைக்கண்ணாடி!


காவியக்கவிஞர் வாலி அவர்களின் அணிந்துரை


ஒவ்வொரு பாலிலிருந்தும் ஒருசில குவளைகள் எடுத்து - முப்பாலின் இறைச்சிப் பொருளை -

வசன கவிதையில் - தனக்கே வசமாகி நிற்கும் தமிழ்நடை கொண்டு - நமக்கு வழங்கியிருக்கிறார்...

‘வித்தகக்கவிஞர்’ என கலைஞரால் விளிக்கப் பெற்ற - என் இனிய இளவல் கவிஞர் பா.விஜய் அவர்கள்.

‘பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?’ என்று ஒரு அற்புதமான வாக்கியம் - வி.ஸ.காண்டேகரின் ‘கிரௌஞ்ச வதம்’ நாவலில் வரும்.

அதுபோல் - என் அன்புத்தம்பி திரு.பா.விஜய்க்கு அறிமுகமோ, விளம்பரமோ தேவையில்லை.

படத்துறையிலும், பதிப்பகத்துறையிலும் நிறைய சாதனைகள் நிகழ்த்தி - தமிழ் கூறும் நல்லுலகெங்கும், உச்சி முகர்ந்து அவரை உச்சத்தில் உட்கார்த்தி வைத்திருப்பது,  வெள்ளிடை மலை. நான் இந்நூல் முழுமையும் வரிவிடாமல் வாசித்தேன்.

உவமைகள், உருவகங்கள், உள்ளீடு இவை மூன்றிலும் விஜய்யின் வித்தகம், அவரது முந்தைய நூல்களைவிட விஞ்சி நிற்கிறது.
சுருங்கச் சொன்னால் - அவரது எழுத்து, வைகலும் மெருகேறி வருகிறது.  இளம் வயதுதான்; இன்னும் நிறையக் காலம் இருக்கிறது, விஜய் ஒரு உலகளாவிய கவிஞராகப் பிறங்குவதற்கு!

தகுதியும் அதேநேரத்தில் வெற்றியைத் தன் தலைக்குக் கொண்டுபோகாத தன்னடக்கமும்; எவரையும் ஈர்க்கவல்ல, சதா புன்னகைக்கும் முகவிலாசமும் -

பா.விஜய்யை - பலருக்குப் பிடிக்க வைத்திருக்கிறது. ஒரே நேரத்தில் - நல்ல கவிஞனாகவும் நல்ல மனிதனாகவும் பிறங்கவோர் அறிதாகப்பட்ட நாளில் -

பா.விஜய் மேற்சொன்ன குணநலம் வாய்க்கப் பெற்றிருப்பது.

அவர் - நல்ல தாய் தந்தை நல்கிய புத்திரனாகவும்; நல்ல மனைவிக்கு உகந்த மணாளனாகவும் விளங்குவதைச் சுட்டிக்காட்டுகிறது.

இந்தநூலில் எது எது - எப்படி எப்படி இருக்கிறது எனப் பட்டியலிட்டுப் பேசுதல் வெகு சிரமம்.

ஒரு கற்கண்டுக் கட்டியில் எந்தப் பக்கம் சுவைத்தாலும் தித்திக்கத்தான் செய்யுமே தவிர, கைக்க வாய்ப்பேது?

எனக்குப் பிடித்த சில வரிகளைச் சொல்கிறேன் - சிறு பட்டியலாக.

‘குயிலின் முதுகில்
ஒரு மாம்பழத்தை வைத்த மாதிரி
புத்தக மூட்டை தூக்கி
பள்ளி சென்ற காலம் அது!’

‘ரவிக்கை அணியாமல்
கிழிந்துபோன உடையணிந்த
பெண்களைப்போல்
ஒரு குடிசை வீடு’

‘பிரசவம்’ என்னும் தலைப்பைத் தாங்கிய பாவில்-
‘ஒருவிரல் பள்ளத்திலிருந்து
ஒரு ஐந்து கிலோ உடம்பு
பிதுங்கி வருகிறதே!’

- இதுபோல் நிறையச் சொல்லலாம். உட்கார்ந்து விரிவாய் எழுத - என் உடல்நிலை இடம் கொடுக்காததால்

என்னால் இன்னும் அதிகமாய்ச் சுட்டிக்காட்டி ஏலவில்லை.

பா.விஜய்யின் படைப்புகள் பற்றிப் பின்னிப் பின்னிப் பேசுவதைவிட -

இந்தநூலும், அவர் படைத்த இதர நூல்களையும் வாசகர்கள் கைகளில் கொடுத்துவிடுவதே மேல்.

அவர்கள்
விழியால் உண்ண வேண்டிய
மொழிகள் இவை.

கவிஞர். வாலி