Sunday 1 January 2012

தேனீர் கடை நட்பு அணைக்கட்டில் உடைந்திடுமா?


தேனீர் கடை நட்பு அணைக்கட்டில் உடைந்திடுமா?

வித்தகக் கவிஞர் பா.விஜய்


தேனீர் கடைதான் சேட்டா
நம் நட்புக்கு பால் காய்ச்சிய இடம்

ஊணுகழிச்சோ என்பதுதான்
உன்னோடு நான் பேசிய
நட்பின் பிள்ளையார் சுழி


அடப்பிரதமனில் இருந்து
அரிகரசுதனே வரைக்கும்
எத்தனை பிராயங்கள் நாம்
எங்கெங்கிலும் கழிச்சிட்டுண்டு

தமிழன் - மலையாளி
நானும் பிரித்ததில்லை
மலையாளி - தமிழன்
நீயும் பிரிந்ததில்லை

தமிழ் மொழியின்
தொன்மைக் கிளை வடிவமே
மலையாளம் என்பதறிவோம்
நீயும் நானும்

‘புட்டும் வேட்டியும்’ என்ற
ஆதித் தமிழ் அடையாளங்களை
நான் விட்டுவிட்டேன்
நீ தொடர்கின்றாய்

வசந்த விழாவை நான்
வரலாற்றில் தொலைத்தேன் - அதை
விஷீக் கனியில் அகழ்ந்தெடுத்தாய்
வணங்குகின்றேன் சிரம்!

உலகில் எல்லா
இனக் குழுக்களுக்கு இடையிலேயும்
தீ மூட்டி பார்த்த அரசியல்தான்
உனக்கும் எனக்கும் இடையே..

மலையாளி என்னும்
இனப் பலகைக்குப் பின் இருக்கும்
மனிதம் என்ற உணர்வில் சொல்

அங்கே நடப்பது
அணை உடையும் பிரச்சனையா..?
ஆட்சி உடையும் பிரச்சனையா…?


வில் கொடி பறந்த நாட்டில்
தமிழன் புகக் கூடாதெனில்
தகர்கிறது சேவற்கொடியின்
தன்மான கல்லறைகள்

விரிந்த முல்லைப் பெரியாற்றில்
விரிக்கப்பட்ட வலை
மலையாள நாட்டுக்காக அல்ல..
மலையாளிகள்; ஒட்டுக்காக!

நீர் மட்டம் உயர்தல்
நீர் மட்டம் குறைத்தல்
என்ற நிலை நியாயம்;
யார் மட்டம் உயர்த்தல்
யார் மட்டம் குறைத்தல்
என்ற நிலை துரோகம்!

அணையில் விரிசல் விழுமென
அச்சப்படுகிறாய் நீ
உலக வரைபடம் எங்குமிருக்கும்
தமிழர் மலையாளிகளின்
அன்பில் விரிசல் விழுமோ என
அஞ்சுகிறேன் நான்!

சுமூகமாய் பாய்ந்து வந்தால்
அது நதி
கேரள அரசியல் சமூகமாய்
அது முடிந்துவிட்டால்
அது நதியல்ல.. சதி!

மத்திய அரசு சொல்வதென்ன?
மாநில அரசு சொல்வதென்ன?
மனிதம் என்ன சொல்கிறதோ
மலையாளிகளே அதைச் செய்யுங்கள்

ஒன்று உறுதி..
முல்லைப் பெரியாறு
அங்கேயே நின்றுவிட்டால்
அது சேறுக்கு உதவும்
இங்கே வந்ததென்றால்
அது சோறுக்கு உதவும்!

கேரள கரைவேட்டிகளே
நதிக்கு கரை
நாங்கள் செய்து கொள்கிறோம்..
நதிக்கு கறை
நீங்கள் செய்யாத வரை!

8 comments:

  1. நல்ல கவிதை தற்போதைய நிலைமைக்கு இதுபோல் ஆயரம் கவிதகள் வேண்டிவரும் ஒன்னு எழுதிவிடு எண்ட பிரியக

    ReplyDelete
  2. மென்மையாக ஆனால் அதி அழகாக தீட்டிய கவிதை, காலத்தே செய்த கவிதையும் கூட.....! மலையாளம் தெரிந்தவர்கள் இதை மொழிபெயர்த்து சேரதேச நண்பர்களுக்கும் புரிய வைக்கலாம். மிக்க நன்றி கவிஞரே !

    ReplyDelete
  3. உண்மை நிலையை உரைத்துள்ளீர் கவிஞரே. இது தேநீர் கடைக்காரர்களுக்குப் புரியுமோ?????.

    ReplyDelete
  4. இனிய நண்பருக்கு வணக்கம் .மிக நல்ல கவிதை பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. முல்லைப் பெரியாறு’

    சொல்லிப் பாரு

    நற்றமிழ்ப் பேரு

    நம்மை ஏய்ப்பது யாரு?



    உடைக்க நினைப்பது

    ஒற்றுமை உணர்வுகளை

    தண்ணீரை வைத்து

    தானியம், காய்கறி

    அரிசியும் பயிரிட்டாயா

    அரசியலைப் பயிரிடுகின்றாய்





    அண்டை மாநிலமே

    அரிசியும் பருப்பும் தந்தும்

    சண்டைப் போட்டே

    சகோதர்களின்

    மண்டை ஓட்டை வைத்து

    மல்லுக்கு நிற்கின்றாய்



    உடைப்பதில் தான்

    இடைத்தேர்தல் வெற்றி

    கிடைப்பதென்பது

    மடையர்களின் சூழ்ச்சி



    தமிழின் உதிரமாய்

    உன்றன் மொழியும்

    தமிழனின் உதிரமும்

    தட்டிப் பறிக்கின்றாய்



    உன்றன் பூமியில்

    உள்ள சாமியைத் தேடி

    உன்றன் பூமிக்கு வந்தவன்

    உதிரம் குடிக்கும் நீயும்

    உலக மகா அறிவிலி





    அணை கட்டாதே

    அன்பால் எம்மை

    அணைக்கட்டு







    "கவியன்பன்” கலாம்

    ReplyDelete
  6. பாட்டன்மார் கெட்டியாய்த் தானே அணைகட்டிப் போட்டனரே

    சேட்டன்மார் மாத்திரம் எப்படித்தான் கற்றனர்ச் சேட்டைகளை

    நாட்டாமை தீர்ப்பு வழங்கவே கூட்டம் நடுவணாட்சிக்

    கூட்டாமல் தள்ளிவைத்தால் நாடோறும் பாடிடும் கூக்குரலே



    "கவியன்பன்”, கலாம்

    ReplyDelete
  7. அணையில் விரிசல் விழுமென
    அச்சப்படுகிறாய் நீ
    உலக வரைபடம் எங்குமிருக்கும்
    தமிழர் மலையாளிகளின்
    அன்பில் விரிசல் விழுமோ என
    அஞ்சுகிறேன் நான்..,

    ஒன்று உறுதி..
    முல்லைப் பெரியாறு
    அங்கேயே நின்றுவிட்டால்
    அது சேறுக்கு உதவும்
    இங்கே வந்ததென்றால்
    அது சோறுக்கு உதவும்!

    நல்ல சிந்தனை விஜய் அண்ணா ..,

    ReplyDelete