Tuesday, 17 May 2011

திண்ணைஉண்மையைச் சொன்னால் திண்ணை வைத்துக் கட்டப்படும் வீடுகளில்தான் மனிதர்கள் இருக்கிறார்கள்.

திண்ணைகளோடு வாழ்ந்து பழகினவங்களுக்கு திண்ணையில்லா வீடெல்லாம் கான்கிரீட் கல்லறைகள்தான்!

அன்னைப்பேச்சு அரும்பேச்சு.. முன்னைப் பேச்சு முறிஞ்சாச்சு... மொன்னைப் பேச்சு ஆனாலும் திண்ணைப் பேச்சு தேன்பேச்சு!

ஒன்னு தெரியுமா உங்களுக்கு?

உலகத்திலேயே உறங்குவதற்கு சிறந்த இடம் திண்ணைதான்!

திண்ணையில ஓரத்திலேயோ அல்லது முகப்பிலேயோ ஒரு திண்டு அல்லது சற்று மேடான ஒருபகுதி இருக்கும். வாட்டசாட்டமா நல்லா முதுக சாய்ச்சுக்கிடுறதுக்கும் தேவைப்பட்டா கைய தலைக்கு குடுத்து சரிஞ்சுக்கிடுறதுக்கும் திண்ணையோட சுகமே சுகம்தான்!

தமிழ்நாட்டு கல்விக்கும் திண்ணைக்குமே பெரிய சம்மந்தம் இருக்கு! பள்ளிக்கூடங்கள் ஆரம்பிச்சதே திண்ணையிலதானே!

காத்து வாங்குறதுக்கு காதல் வாங்குறதுக்கு திண்ணைய விட சிறந்த இடம் இருக்கவே முடியாது.

எதிர் திண்ணையில் இருந்து வாசல் தெளிக்கும் போது வர்ற வளையல் சப்தம். வேணுங்காட்டிக்கே தெருவுல வர்றது யாருன்னு பாக்குறதுக்காகவே திண்ணைக்கு வந்து போகிற கொலுசு சப்தம்.

காய் வியாபாரிக்கிட்ட பேரம் பேசுற சாக்குல திண்ணையோர தூண்களில் நின்னுக்கிட்டு காட்டுற ஒய்யாரம்!

இதுக்கெல்லாம் திண்ணைய விட்டா வேறு இடமேது?

இப்ப பெரும்பாலும் ஊர்ல எல்லாம் திண்ண கிழவிங்க.. திண்ணப் பேச்சு.. திண்ணை கல்யாணம்... அப்படிங்குற வரிசையில திண்ணைகளே இல்லாம போச்சு.

திண்ணைகளுக்குப் பதிலா அங்க குட்டியா நாகரீகமா சிட்டவுட் அப்படிங்கு ஆங்கில வார்த்தை பிரயோகப்படுத்தி வேறவொரு நாகரீகம் தல காட்டுது.

இன்னும் ஆழமா கிராமத்துக்குள்ள போயி பாத்தோம்னா முழு நகர கட்டிடமாகவும் இல்லாம கிராமிய கட்டமைப்பில் இருந்து முழுதும் வெளிய வர்ற முடியாம பளீர் பளீர்ன்னு கண்ண அடிக்குற கலர்ல நிக்குற கட்டிடங்கள பாக்கும் போது திண்ணைங்க தொலைஞ்சு போன அவலம் நெஞ்சுக்குழிக்குள்ள தூக்கு மாட்டிக்கிட்டுதான் தொங்குது.

இனிமே திண்ணைகள எப்படி கண்டுபிடிக்கப்போறோம்னு புரியல..! ஊர்களுக்குள்ள பல கல்யாணத்த பேசி தீர்த்ததும் திண்ணைகள்தான்! பல பஞ்சாயத்துகள் நடந்து முடிந்ததும் திண்ணையிலதான்! பெருசா எழவு விழுந்து போச்சுன்னா ஒப்பாரிகள தாங்குற வலியான இடங்களும் திண்ணைகள்தான்.

ராத்தரியில எல்லா திண்ணை ஓரமாவும் ஏதாவது ஒரு பாட்டி தன் பேரன் பேத்திகளை மடியில சாய்ச்சுக்கிட்டு தன்னுடைய நரம்பு பிசங்குனவிரல்களால அந்த பிஞ்சு தலைகளை தடவிக்கொடுத்துக்கிட்டே தேசிங்கு ராஜா குதிரையெறி வந்த கதைகளையும் நல்லதங்காள் கெணத்துல விழுந்த கதையையும், துரோணர்கிட்ட அர்ச்சுனன் அம்புவிட கத்துக்கிட்ட கதையையும் சொல்லிக்கிட்டேதான் இருக்கும்ங்க..!

இன்னைக்கு கத சொல்ற வழக்கமே காணாம போயிடுச்சே..! டீவிப்பொட்டிங்க அதிகரிச்சு போனதால எல்லா பொடுசுகளும் சுட்டி டிவியிலும் நிக் டிவியிலும்  போகோ சேனல்லேயுமே பொழுதகழிச்சிடுதுங்க.

இப்ப இருக்குற பொடுசுகளுக்கெல்லாம் பாட்டிக தேவைப்படுறது இல்ல..! பாட்டிக சொல்ற கதைகள்ல கருத்து இருக்குதோ என்னமோ ஆனா வாழ்ந்து முடிச்ச வாழ்க்கையோட வாசம் இருக்கும். அந்த வாஞ்சையையும் வாசத்தையும் இந்த டிவிப்பொட்டிகளால எப்படி படம் புடிக்க முடியும். இதுக்கு திண்ணைகள்  அழிஞ்சு போனதொரு முக்கியமான காரணம்.

ஒருவகையில விமர்சனமா பாத்தா.. தீண்டாமை ஆரம்பிச்சதும் திண்ணைகள்ல இருந்துதான். வூட்டுக்குள்ள ஒழைக்க முடியாம அப்பப்ப பொழக்கடைக்கு போய்வர முடியாம இருக்குற பெருசுகள ஒதுக்கி வைக்கிற இடமா பின்னாள்ல மாறிப்போச்சுங்குற அவலம் கொடூரமானது.

இருந்தாலும் கூட,  அந்த தவறையும் மன்னிச்சு திண்ணைகள நாம வீட்டோட வீடா சேத்துக்கிடுறதுக்கு காரணமே அதுக்கு பின்னணியில ஒரு பெரிய  பாரம்பரிய நாகரீக கலாச்சாரம் ஒளிஞ்சிருக்கிறதுதான்.

நெடுங்காலத்துக்கு முன்னால வீடுகளின் முகப்புல திண்ணைகள் கட்டப்பட்டதற்கு காரணம் போக்குவரத்துல கட்டவண்டியும் கைவண்டியுமே பங்களிச்ச நேரங்கள்ல பொதி சுமந்து வருகிற பயணிக. புள்ள குட்டிகளோட வர்ற பொட்டுங்க ஒதுங்குறதுக்கும் ஓய்வெடுக்குறதுக்கும் ஒறங்குறதுக்கும்தான் அன்னைக்கு வீடுகளுக்கு முன்னால திண்ணைகள கட்டி வச்சாங்க.

யாரு எவருன்னே தெரியாம - ஊருபேரு அறியாம - ஒதுங்குறதுக்கும் ஒறங்குறதுக்கும்  எடங்கொடுத்த ஒரு பெரிய சமூகம் நம்ம தமிழ் சமூகம்.

கால் வலி ஆத்துறதுக்கு - கஞ்சித்தண்ணிய குடிக்குறதுக்கு - கட்டுச்சோறு உண்ணுதற்கு கட்டப்பட்ட திண்ணைகளோடு சேர்த்து முடிஞ்சு போனது அந்த நெடுங்கால நாகரீக வரலாறும்தான்.

திண்ணைகள எல்லாம் இனிமே ஊர்ப்பகுதிகளில் எப்போ பார்க்கப் போறோம்! 
ஒருகாலம் இருந்துச்சு..!

பட்டாளத்துல இருந்து விடுப்புல வர்ற மகன அம்மாக்காரி கூட்டிக்கிட்டு வருவா.. தெருவழிய வந்துக்கிட்டு இருக்கும்போதே எதிர்த்திண்ணைக்காரஙக் பூரா எதிர்ப்படுவாங்க..! எல்லாரும் திண்ணையில உக்கார்ந்தபடியே ஒவ்வொருத்தரும் பரஸ்பரம் பேசிக்கிடுவாங்க பாருங்க.. “ஏ.. நங்க என்ன ஓ மவன் வந்துட்டான் போலிருக்கே..”

அடுத்த திண்ணையில இருந்து உடனே பதிலு வரும்.. “நங்கைக்கு இனிமே ஒருமாசம் இருப்பே இருக்காது.. ஏம்பா நல்லா இருக்கேல்ல..” என்று அனுசரணையான விசாரணை வரும்!

தெருவில் நடந்துகொண்டே பட்டாளத்து உடுப்பிலுள்ள இராணுவக்காரன் பதில் சொல்வான் “அ... இருக்கேன் பெரியம்மா.. பெரியப்பா நல்லா இருக்காருல்ல..” உறவுமுறை விசாரணை நிகழும்.

கையில பெரிய பெட்டி கணகணக்கும். கூடவே எங்கிருந்தோ எல்லா கிராமத்திலும் புதுசா வர்ற விருந்தாளியை வரவேற்க, ஏழெட்டு சிறுவர்கள் வந்து குவிந்திடுவார்கள். பூட்ஸ் கால்களும், பச்சை தொப்பியும் அவங்களுக்கெல்லாம் ஒரு பெரிய வேடிக்கை! கிட்டத்தட்ட வீடு பக்கத்துல வந்திடும்.

வெத்தலைய மெண்ணுக்கிட்டே ரெண்டடி தள்ளியிருக்குற வீட்டுத் திண்ணையில உட்காந்திருக்குற ஒரு கெழவி கண்ண கூராக்கி பாக்கும்.  பாத்து அடையாளம் கண்டுக்கிட்டு ஒடனே வீட்டுக்குள்ள திரும்பி “ஏன்டி தாமர ஒரு ரொட்டா தண்ணி கொண்டா..” அப்படின்னு சத்தமா கூவும்.

இத காதுல வாங்குற ராணுவக்காரனோட அம்மாக்காரி சட்டுன்னு முகம் கோபமாகி, “ஏம்பா.. அங்க இங்க பாக்காக பேசாம வீட்டுக்கு வா..” என்று தான்பாட்டிற்கு ஒழுங்காக வந்து கொண்டிருக்கும் தண்டவாள ரயிலை கைப்பற்றி இழுக்காத குறையாய் தன்னுடைய வீட்டிற்குள் இழுத்து போவாள் அம்மா!

“ஒரு கண்ணு ஊர்ல நல்ல கண்ணு கெடையாது.  மொத்தமும் நொள்ள கண்ணுதான்” என்று இரண்டடி தள்ளி திண்ணையில் அமர்ந்து இருக்கின்ற கெழவியைப் பார்த்து சொன்னவாரே அம்மா நகர. ராணுவக்காரனுக்கு ஒன்னுமே புரியாது.

சட்டென எதேட்சையாய் அவன் பார்வையில் அந்த கிழவி அமர்ந்திருக்கிற எதிர் திண்ணை கண்ணில் படும். அங்கே தாமரை என்கிற கதாபாத்திரம் அந்தக் கிழவியின் பேத்தி தண்ணீர் கொண்டு வந்து கிழவியின் முன்பு நீட்டிக் கொண்டிருக்க. அவள் ராணுவக்காரனின் கண்ணில் படுவாள். வரவரவென கூந்தலை இழுத்து தலை உச்சியில் முடிந்து கொண்டு. சாயம்போன பூப்போட்ட பாவாடையின் ஒரு பகுதியை எடுத்து இடுப்பிலே சொருகிக் கொண்டு, சரிவர மூடப்படாத தாவணியோடு நின்று கொண்டிருக்கும் தாமரை தண்ணீர் கேட்ட கெழவியைப் பார்த்து, “இப்பத்தான கஞ்சித் தண்ணிய குடிச்சிட்டு வெளியில வந்து உக்காந்த.. அதுக்குள்ள தாகம் தவிச்சுப்போச்சா..” என படபடவென மிளகாயை வாணலியில் போட்டது மாதிரி காரமாய் பொறிந்து விட்டு வீட்டிற்குள்ளே சென்றுவிடுவாள்.

கிழவிக்கு பேத்தியின் படபடப்பு எந்தவொரு விளைவையுமே ஏற்படுத்தியிருக்காது. அதுபாட்டிற்கு ரோட்டாவில் இருக்கிற தண்ணீரை குடித்துக்கொண்டே ராணுவக்காரன் மீது ஒரு பார்வையை வைத்திருக்கும். கிழவிக்கு அதனுடைய எண்ணம் நிறைவேறி விட்டது.

அதாவது பட்டாளத்தில் இருந்து வரும் தன் சகோதரனின் பேரனின் குடும்பம் பேச்சுவார்த்தையில்லாமல் கிடக்கிறது. தாமரையை பட்டாளக்காரனுக்கு அதாவது முறைமாமனுக்கு அறிமுகம் செய்து வைக்கவேண்டும். மூன்றரை வருடம் கழித்து வாட்டசாட்டமாய் வருகிறவன் கண்ணில் எடுப்பாய் துடிப்பாய் வேறு ஒருத்தியும் படுவதற்கு முன்னால் அவன் உரிமைக்காரி மீது அவன் கண் படவேண்டும். அதுதான் கிழவியின் எண்ணம்.  திண்ணையில் உட்கார்ந்தவாரே தீயைப் பற்றவைத்து விட்டாள் கிழவி.  நடந்துவிட்டது அவள் நினைப்பு!

இதன்பிறகு மெல்ல தாமரை குளித்து திண்ணைக்கு வருவாள். பட்டாளத்துக்காரன் வேட்டி சட்டை பளபளக்க தன் சகாக்களை சந்திக்க டீக்கடைக்கு வருவான்.

போகும்போதே உள்ளே இருந்து பட்டாளத்துக் காரனின் அம்மா, “எப்பா பாத்து... அங்க எங்கேம் நின்னு பேசிக்கிட்டு இருக்காத” என எச்சரித்துத்தான் அனுப்புவாள்.  ஆனால் அந்த எச்சரிக்கைக்குள் எத்தனை எரிகுண்டுகளை வைத்து அனுப்பினாலும் அந்த எரிகுண்டுகளை எல்லாம் பூச்செண்டாக்குகிற புன்னகைகள் ஆங்காங்கே திண்ணைகளில் பெருகிதான் கிடக்கும்.

ஆள் யாரென்றே தெரியாமல் மீண்டும் தாமரை கண்ணில் பட, சட்டென அவள் திண்ணையிலிருந்து உள்ளே ஓடிவிடுவாள். பதிலுக்கு பெரிய தாமரை நின்றிருக்கும். அதாவது தாமரையின் அம்மா!

“என்ன தம்பி.. சௌக்கியமா!” என்று குரலில் ஒரு வாஞ்சை கலந்து கேட்டதோடு நில்லாமல் செப்புக்குவளையிலே நிரம்பிய மோரை நீட்டுவாள். திண்ணையில் உட்காருவான் பட்டாளம்.

“சண்டையெல்லாம் போடுவீயோ..?” என்று கிழவி வெற்றிலையை மென்றபடி கிண்டலையும் சேர்த்து மெள்ளுவாள்.

மோரை குடித்துக்கொண்டே தடித்த மீசையைத் தடவியபடி பட்டாளம் சிரிக்கும். பட்டாளத்தின் பார்வை அடிக்கடி ஜன்னல் பக்கமும் போய்வரும்.

“கல்யாணமான அப்பறம்.. கட்டுன பொண்டாட்டிய துப்பாக்கியாள மெரட்டிறாதய்யா..” என்று கிழவி மீண்டும் கிண்டல் பாக்கை எடுத்து போட, கலகலவென சிரிப்பான் பட்டாளம்.

இந்தத் திண்ணைப்பேச்சு தினப்பேச்சாகும்!

எதிர்வீட்டுத் திண்ணைப் பேச்சில் தன்னுடைய மகன் சந்தனமாய் தேய்ந்து கொண்டிருக்கிறான் என்ற விமர்சனம் பட்டாளத்தான் அம்மாவிற்குத் தெரியவர, ஊரே அதிரும்படி அவள் நர்த்தனம் ஆடுவாள்.

உடனே ஊர்ப்பெருசுகள் எல்லாம் கூடி ஒரு திண்ணைக்கு வரும்.  பிறகு இந்தக் கதை எல்லாத் திண்ணைகளுக்கும் போகும்.

“பட்டாளக்கார பைய தாமரைய கட்டிக்கப் போறானாம்“ என திண்ணையிலேயே கயிறு திரிவார்கள்.

திண்ணையிலே துவங்கிய சண்டை திண்ணையிலே முடிந்து திண்ணையில் ஒரு நிச்சயதார்த்தமே நடந்தேறிவிடும். ஒருவழியாய் ஊர் வாயை மூடமுடியாத நங்கையான பட்டாளக்காரனின் தாய் நல்ல சேலை உடுத்தி ஒருநாள் தன்னுடைய சகோதரனின் வீட்டிற்குச் செல்வாள்.

பழைய பகை மறைஞ்சு ஒழியும். பட்டாளத்து மாப்பிள்ளை’கும் சின்ன தாமரைக்கும் அடுத்த முகூர்த்தத்திலேயே டும்டும்டும் என நாட்டாமைக்காரங்க பெண் வீட்டார் திண்ணையில் உட்கார்ந்து வெற்றிலை-பாக்கு-சீவல்-ஒரு ரூபாய் துட்டு மரியாதையை ஏற்று மஞ்சள் குங்குமம் சாற்றுவார்கள். ஒரு திண்ணையில் முடிந்துபோகும் பழைய பகையும் புதிய திருமணமும்!

எங்க பாட்டனாரு ஒரு கதை சொல்வாரு.. சோழ மகாராஜா ஒற்று அறிஞ்சு வந்த கதை!

ராஜராஜ சோழன்  காலத்துல நடநத்தா..

சோழ மகாராஜா என்ன செய்வாறாம்.. நாட்டு மக்கள் எல்லாம் தன்னைப் பத்தி எப்படி பேசிக்கிறாங்கன்னு மந்திரிமாரெல்லாம் கூப்பிட்டு விசாரிப்பாராம். அவங்க சொல்றத எல்லாம் குறிப்பெடுத்துகிட்டு மந்திரிங்க சொல்றதெல்லாம் உண்மைதானான்னு தெரிஞ்சுக்க மாறுவேஷத்துல புறப்படுவாராம் மக்கள் மத்தியில.

சரியா ராத்திரி சாப்பாட்டு நேரம் முடிஞ்சதுக்கு அப்பறம் ஒவ்வொரு திண்ணையாத்தான் போயி படுத்துக்கிடுவாராம் ராஜராஜ சோழன். திண்ணையோரம் படுத்திருக்கும் போது சுவருக்கு அந்தால பக்கம் புருஷனும் பொஞ்சாதியும் ரா சாப்பாட்ட முடிச்சுக்கிட்டு பேசுற பேச்சுல  ராசாவ பத்தி பேசும் வரும்.   அப்ப.. குடும்பங்கள்ள ராஜாவப்பத்தி என்ன பேசிக்கிடுறாங்கன்னு நேரடியா தெரிஞ்சுக்கலாம். திண்ணைகள் ஒற்று அறியுற எடமாவும் இருந்திருக்கு.

திண்ணைகளைப் பொறுத்தவரைக்கும் முறிஞ்ச உறவ ஒட்டவைக்குற எடம். திண்ணைப் பேச்சுல பெரும்பேச்சு புழுதிப் பேச்சா இருந்தாலும் திண்ணைகள் இருக்குற ஊருக்குள்ள ஒருஜீவன் இருக்கும்.  எல்லா மக்களும் ஒருத்தருக்கொருத்தர் ஏதாவது ஒன்னைப் பத்தி பேசிக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு அமைஞ்சிருந்தது.

ஆனா, இந்த அப்பார்ட்மெண்ட் காலத்துல அப்படி இல்ல.. எதிர்வீட்டுல குடியிருக்குறவங்க எவருன்னே தெரியாமல்ல வாழ்க்க நடக்குது.

நாத்தனாரோடு ஒன்னுவிட்ட சித்தப்பா மகனுக்கு காய்ச்சல் வந்து அழகர்கோயில் முனுசாமிட்ட போயி மந்திரிச்சு கட்டுன கயிறு விசயத்துல இருந்து, நாட்டாரு பேரன் நடுத்தெருவுல இருக்குற சின்னம்மா மக  செவ்வந்தியோட சோழக்காட்டுக்குள்ள புகுந்து வெளையாடுன கதை வரைக்கும் திண்ணையில தானே அரங்கேறும்.

திண்ணை எதுக்கெல்லாம் உபயோகப் பட்டிருக்குன்னு பாருங்களேன்.

திண மாவு அரைக்குறதுக்கு, வடகம் காயப்போடுறதுக்கு, கோலம் போடும்போது கலர் கோலப்பொடி டப்பாவ திண்ணையில அடிக்கி வச்சுட்டுத்தான் மெதல்ல புள்ளி வைக்க ஆரம்பிப்பாங்க.

திண்ணைகள் வீட்டுக்கு வெளியே இருந்தாலும் வீட்டுக்குள்ளதான் சதாசர்வ காலமும் உறவாடிக்கிட்டு கிடந்திருக்கு.

இப்போ தபால் துறைக்கு புதுசா சேர்ந்த போஸ்ட் மாஸ்டர்க்கெல்லாம் தெரிஞ்சிருக்குறதுக்கு வாய்ப்பில்ல.. நாலு கிலோமீட்டர் ஒத்த கடுதாசி கொடுக்குறதுக்காக ஓயாம சைக்கிள மிதிச்சுக்கிட்டு வந்த தபால்காரர் திண்ணையில உக்காந்து ஒரு க்ளாஸ் பானை தண்ணிய வாங்கி குடிச்சுட்டு கடுதாசிய பிரிச்சு படிச்சு காட்டுறப்ப அந்த திண்ணைக்கு கிடைச்ச கௌரவம் திருநாள் கௌரவம்ன்னு சொல்லலாம்.

திண்ணைகள கழிச்சுப்புட்டு என்ஜினியர் மக்கள் வீடுகள கட்டி குவிக்க ஆரம்பிச்சதுக்கப்பறம் அந்த வீட்டுக்குள்ளார பெருசா பால்கனி வந்துச்சு.. படுக்கை அறை வந்துச்சு.. பொகைய வெளியேத்துற கொழாய் வச்ச அடுப்பாங்கர வந்துச்சு, வெஸ்டன் டாய்லெட் விதவிதமா வந்துச்சு, வரவேற்பறை, சாப்பிடுற கூடம் இதெல்லாம் வந்துச்சு. ஆனா அவ்வளவு பெரிய வீட்டுக்குள்ளார பிரம்மாண்டமா ஒரு வெறுமையும் வந்துச்சு அந்த வெறுமைய தீர்த்து வைக்குறதுக்கு திண்ணைய விட்டா வேற தீர்ப்பு ஏது?

பிரம்மாண்டமான வீடு
மரியாதையை சம்பாதிக்கிறது;
சின்னத் திண்ணை 
மனிதர்களை சம்பாதிக்கிறது!

ஆக,
என் அடுத்த தலைமுறைக்காரர்களே
திண்ணை இல்லாத வீட்டிலும் 
கோயில் இல்லா ஊரிலும் 
குடியிருக்கக் கூடாது!

13 comments:

 1. Excellent sir.The last paragraph is really excellent.

  ReplyDelete
 2. Superbbbbbbbbbbbbbbb sir. Thank you for sharing...!
  ____________
  Data Entry India

  ReplyDelete
 3. You have brought out life in your write up trust me up I was practically imagining the scenes while i was reading them. Honestly village life is the best and natural.

  ReplyDelete
 4. அன்பு நண்பருக்கு வணக்கம் .
  திண்ணை பற்றிய ஆய்வு மிக நன்று .பாராட்டுக்கள்
  அன்புடன்
  கவிஞர் இரா .இரவி
  www.eraeravi.com
  www.kavimalar.com
  eraeravi.wordpress.com
  eraeravi.blogspot.com

  ReplyDelete
 5. arumai kavignarae.... thinnai illa veedum vennai illa venpongalum...waste...

  ReplyDelete
 6. Superb. Last Paragragh is really Superb. Thank you for sharing.

  From
  VijiLoganaths
  Saudi Arabia
  Dammam  Thank you for sharing

  ReplyDelete
 7. hi Vijay sir, romba nalla irukku,oru thinnai enkira varthayila ethanai kadaigal adangi kitakkinrana,aanaa unmai...

  ReplyDelete
 8. vidhga kaviganrin Aalntha Sindhanaiyil ithuvum ondru....

  Nandri kavigaree.....

  ReplyDelete
 9. Therintho thriyamalo naam izhanthu varum paarampariyangalai meettedukkum puthu muyarchikku
  En Ulam Kanintha vazthukal...malaratum pazhaiya panpaadugal puthu polivudan...

  ReplyDelete
 10. kavingre, thinnai enathu patti vitel ennaku migavum piditha edam, palaya ninaivugalai kalri vittute nanba, kandipa naan veedu katupodhu oru thinna vachai vitathan katuven

  ReplyDelete
 11. பழைய ஞாபகங்களில் நுழைய முடியாதவர்களையும் நுழைய தெரியாதவர்களையும் தலையை வளைத்து நாகரீக கூட்டுக்குள் இருந்து வீட்டுக்குள் அழைத்துச்சென்றது அழகு. திண்ணையின் மீது கட்டிய அன்பு விண்ணையே முட்டியது வியப்பு.உண்மையில் என்னையும் அன்னையின் அன்னையின் திண்ணை நினைப்பில் ஆழ்த்தியது.நகர நரக சுமை சுமக்கும் இதயம் கொஞ்சம் அழுத்தியது.காணாமல் போன கருணையும் அன்பும் அன்னையின் வடிவாய் திண்ணையின் வடிவாய் ஞாபகம் வருதே ........ ஞாபகம் வருதே

  ReplyDelete