Tuesday 24 May 2011

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே


ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே



ஒரு நதி போல வேர்களில் ஒட்டியிருக்கும் மண்ணையும் பூக்களில் படிந்திருக்கும் வாசத்தையும் வருடிக்கொண்டே நடக்கிறது என் வாழ்க்கை!

என் டைரியின் பக்கங்களை மிகப்பழைய நாட்களுக்குத் திருப்புகிறேன். மங்கலான காட்சிகள் விரிகின்றன. 

ஒரு ட்ரங்கு பெட்டி, ஒரு மூட்டை சாமான்கள் இவற்றோடு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் பல இளஞ்ஜோடிகள் பலபல ஊர்களில் கூடுகளைவிட்டு குடிபெயர்ந்து கொண்டிருந்த காலகட்டத்தில், என் அப்பா வி.பாலகிஷ்ணன்-என் அம்மா க.சரஸ்வதி இருவரும் கோவை சித்தாப்புதூர் பகுதிக்கு அதே ட்ரங்குப்பெட்டி மூட்டை சாமான்களுடன் வந்து இறங்கினர்.

பஞ்சாலை நிறுவனத்தில் என் தந்தையும், மாநகராட்சிப்பள்ளியில் ஆசிரியராக என் அம்மாவும் வாழ்க்கையின் பற்சக்கரத்தை சுழற்ற ஆரம்பித்த நேரம்! 

சாய்பாபா காலனி என்ற பகுதிக்கு நாங்கள் குடிவந்த பிறகு அம்மா அப்பா இருவரும் மாலை வரை வேலை நிமித்தமாய் என்னோடு என் கனவுகளோடு கைகுலுக்க முடியாத பொழுதுகளில் என் குழந்தைப்பருவ துள்ளல்களை ஆசைகளை ஏக்கங்களை ஆசிர்வதித்தவர் ஆச்சியம்மா!

என் இரண்டு வயது இதயத்திற்குள் நிரம்பி வழிந்த தனிமையை ஒரு குதூகல நந்தவனமாய் தினந்தோறும் மாற்றியவர் எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்த ஆச்சியம்மா! 

இப்போதும் கோவைக்கு செல்லும் போதெல்லாம் ஆச்சியம்மாவை சந்திக்காமல் நான் திரும்புவதில்லை.

அவரைப்போன்ற ஒரு அரிய ஜீவனை இந்த பொருளாதாரத்திற்கு அலைபாயும் பொழுதுபோக்கு உலகில் நான் கண்டதே இல்லை.

எந்த ரத்த சம்மந்தமும் இல்லாமல், எந்தவித பிணைப்புக்காவும் அல்லாமல் என்னை எல்.கே.ஜி பருவம் வரை மடியேந்தி வளர்த்துவந்த மாதா அவர்! 

சாய்பாபா காலனி இல்லம் ஒரு ஜனரஞ்சகமான பகுதி! எங்கள் வீட்டிற்கு மேலே போட்டோ ஸ்டுடியோ, டைப்ரைட்டிங் இன்ஸ்ட்டியூட், பெரிய செருப்புக்கடை, பேன்ஸி ஸ்டோர், எப்போதும் முட்டை பரோட்டா வாசமடிக்கும் தேநீர் கடை என ஒரு ஜனரஞ்சக சமூகத்துக்குள் நான் வளர்ந்தேன். 

என் ஆரம்பப்பள்ளி நாட்கள் அருகே இருந்தே எம்.சி.ஆர்.ஆர். பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்தது. அங்கே தமிழ் என்று எழுதுவதற்குப் பதிலாக திமில¢.. திமில்.. என்று எழுதிவைப்பதைப் செல்லமாக என் செவிவருடி கண்டித்த வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து கையில் ஒரு சிறு பிரம்பை வைத்திருக்கும் பல் கொஞ்சம் எடுப்பாக இருந்த அந்த வாத்தியாரை ஞாபகம் இருக்கிறது. 

மிக அழகாக எப்போதும் துள்ளல் நடையோடு எங்களுக்கு வகுப்பெடுத்துப்போன ஒரு தலைமையாசிரியை ஞாபகம் இருக்கிறது.
ஒரு பழைய ஊஞ்சல்! சீசா! குட்டியாய் ஒரு விளையாட்டு மைதானம்! இங்கே பயந்த சுபாவத்தோடு எல்லா வரிசைகளிலும் பின்வரிசையைத் தேடி ஓடி நின்ற நான், ஞாபகம் இருக்கிறது!

எங்கள் குடும்பத்தில் என் அப்பாவின் அம்மாவின் வியர்வை மெல்ல மெல்ல ஒரு சிறிய உயரத்திற்கு எங்களை அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது சபர்மன் மேல்நிலைப் பள்ளியிலும்  அதனைத் தொடர்ந்து இராமலிங்கம் உயர்நிலைப் பள்ளியிலும் சேர்க்கப்பட்டேன். 

உண்மையைச் சொன்னால், எனக்கு இராமலிங்கம் உயர்நிலைப் பள்ளியில் படித்தது என்பது என் உலகத்தை வேறொரு திசைக்குத் திறந்துவிட்ட திறவுகோல் எனலாம்! ஏனெனில் நான் அங்கே படித்ததைவிட ஊர் சுற்றியது அதிகம்!  அங்கே மிகப்பெரிய நண்பர்கள் வட்டம்! நண்பர்களோடு நான் கழித்தப் பொழுதுகள் உண்மையிலேயே எனக்கு போதிமர நாட்கள் என்றே சொல்ல வேண்டும். 

கவிதை எழுதுவது மட்டும் கல்வியல்ல..! கள் குடிப்பதும் ஒருவகையில் கல்விதானே! அந்தவகையில் ஊர் சுற்றுவது முதல் உலகப்பார்வை பார்ப்பது வரை என் நண்பர்களோடுதான் என் பொழுதுகள் பூக்கத் துவங்கின! 

இதற்கிடையில் நாங்கள் சாய்பாபா காலனியை விட்டு கோவையில் பெரும்புகழ்பெற்ற முருகனின் ஆலயம் இருக்கும் மருதமலை அடிவாரத்திலே என்னுடைய அப்பா வீடுகட்டி எங்களை அழைத்துச் சென்றார். 

அந்த வீட்டைச் சுற்றி மிகப்பெரிய வயல்காடு-கரும்புத் தோட்டம் - சோளம் விளைகின்ற பூமி - பெரிய கிணறு - குபுகுபுவென அங்கே கொப்பளித்து வருகின்ற கவுண்டர் வீட்டு பம்ப் செட் என அவ்விடம் இயற்கையின் ஏகாந்தமாய் எனக்கு அமைந்தது!

அதிகாலை மேகங்கள் தரைமோதிக் கொண்டிருக்க, வித்தியாசமான அகவல் ஒலியோடு நாற்பது ஐம்பதுக்கும் மேற்பட்ட மயில் கூட்டம் எங்கள் வீட்டிற்கு முன்னால் ஊர்வலகம் போகும்!

தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்பதால் ரம்போ, ராபீன், ரோமீ என்று எங்கள் வீட்டில் கூடுதலாய் மூன்று உறுப்பினர்கள் சேர்ந்து இருந்தார்கள். அவர்களை நாங்கள் நாய்கள் என்று ஒருநாளும் எங்கள் மனதிற்குள் பிரித்துக் கொண்டதே இல்லை.

என்னுடைய அப்பாவிற்கு ஒரு பழக்கம், வீட்டிற்கு வரும்போது இனிப்புகளோ விளையாட்டு சாமான்களோ வாங்கி வராமல் சிறுவயதில் இருந்தே புத்தகங்கள் வாங்கித் தருவது அவருடைய வழக்கம்!

நன்றாக நினைவிருக்கிறது அவர் எனக்கு முதன்முதலாக வாங்கித்தந்த புத்தகம், குறளோவியம் எனும் கலைஞரின் எழுத்தோவித்தைத்தான்!   

அது என்னவென்றே புரியாத வயதில் அதைப் படிக்க ஆரம்பித்து, பின்னர் புரிந்து படித்து என என்னுடைய படிப்பார்வம் பல்கிப் பெருகியதைக் கண்டு பள்ளியில் நான் படித்து பட்டம் பெறுவதைவிட உலகப்படிப்பை நான் படிக்க ஆரம்பித்தில் என் தந்தை மிக மகிழ்ந்து நெகிழ்ந்துபோனார்.

அதனால்தான் எட்டாம் வகுப்பில் நான் தேர்ச்சி பெறாமல் வீட்டிற்கு ஒரே ஒரு செல்லப் பிள்ளையாய் இருந்தும் என் அப்பா அம்மாவின் கௌரவத்தை ஃபெய்லாகிய மாணவன் என்ற பட்டத்தோடு உடைத்தெறிந்த போது கொஞ்சமும் கலங்காமல் என்னை அரவணைத்து அடிபடும் கல் சிலையாகும், அடிபடாத கல் எல்லோரும் மிதிக்கும் படியாகும் என்று திடமும் தன்னம்பிக்கையும் டன் கணக்கில் எனக்கு அள்ளிக் கொடுத்தவர் என் அப்பா! 

பதினொன்று பனிரெண்டாம் வகுப்புகளில் எனக்கு அமைந்த ஆசிரியர் பெருமக்கள் மிகவும் அன்பிற்குரியவர்கள். 

இயற்பியல் ஆசிரியரில் இருந்து கணிப்பொறி ஆசிரியர் மற்றும் தமிழாசிரியர் வரைக்கும் எனக்கொரு தனி மரியாதையும் தனி ஆசனமும் வழங்கினார்கள். 

தினமும் நான் பள்ளிக்கு வரும்போது ஒரு வார்தையைச் சொல்லுவார்கள் நண்பர்கள்.  கோலம் என்றொரு வார்த்தை... பேனா என்றொரு வார்தை..!


நான் மறுநாள் அநத் வார்த்தைக்கு பத்து வரிகளில் கவிதை எழுதி வருவேன்.  எழுதிய கவிதையை மதிய உணவு இடைவேளையில் எல்லோரும் அடுத்தவர் உணவை அபகரித்து தின்று முடித்து ஒருவர்மடிமேல் ஒருவர் கிடந்து உறங்கி மிச்சப்பட்ட சிற்சில நிமிடங்களில் நான் எழுதிக் கொண்டு வந்த படைப்பு அங்கே அரங்கேறும்! அது அவர்கள் புரிந்து கேட்டார்களா? புரியாது கேட்டார்களா? தெரிந்து கைதட்டினார்களா? தெரியாது கைதட்டினார்களா? என்று அறிந்துகொள்ள இன்று இயலவில்லை. ஆனால் அன்று அவர்கள் கொடுத்த உற்சாகமும் கைதட்டலும்தான், பின்வரிசை மாணவனாகவே ஒரு இனம்புரியாத தாழ்வு மனப்பான்மையோடு எல்லா மேடைகளிலும் ஒதுங்கி ஒதுங்கி இருந்த எனக்குள் இலட்சம் இலட்சம் சிறகுகளை என்தோள்களுக்குப் பின்னால் தைத்துக் கொண்டிருந்தது. 

பிறகு ஒருநாள், மாநில அளவில் நடந்த கவிதைப் போட்டியில் நண்பர்களால் என் அப்பாவினால் நிர்பந்திக்கப் பட்டேன். என்ன வியப்பு.. மாநிலத்தில் முதற்கவிதையாய் என்னுடைய கவிதை..!  

அதற்கு என்னைவிட என்னை ஊக்குவித்த நண்பர்கள் அடைந்த ஆனந்த தாண்டவத்திற்குத்தான் அளவேயில்லை. 

அப்போது என்னுடைய ஒட்டுமொத்த வனளாவிய தாகத்திற்கு ஒரு பெரிய தண்ணீர்ப் பந்தல் தடாகத்தை கொடுத்தது கோவையில் உற்சாகமாய் இயங்கிக் கொண்டிருந்த இலக்கிய பாசறை என்ற அமைப்பு!

திரு.அ.மு.தமிழினியன், புவனாவால் இயக்கப்பட்ட அந்த அமைப்பில் நான் உறுப்பினராய் சேர்ந்து முக்கியமான ஒரு இடத்திற்கு வந்தேன்.  அங்கேதான் மேடைகளிலே பேசுவதற்கு, கவியரங்கங்களிலே கலந்து கொண்டு கைதட்டல்களை அள்ளுகின்ற இலாவகத்தை அறிந்து கொள்வதற்கும் ஒரு பெரிய பாசறையாய் எனக்கு அது பயன்பட்டது.

ப்ஸ்டு 2 முடித்த பிறகு பொறியியல் வல்லுனராக வேண்டும் என்கிற என் தந்தையின் தாயின் ஆசையை நிறைவேற்ற என்னால் இயன்றவரை படித்தும் உலகப்படிப்பே எனக்குள் ஊறிக்கிடந்ததே தவிர புத்தகப் புழுவாய் என்னை பழமைப் படுத்திக் கொள்ள இயலவில்லை.
மதிப்பெண்கள் மாண்டுபோனது. ஆனாலும் என் தந்தை வழக்கம்போல் இதயம் இடிந்து கிடந்த எனக்குள் ஒரு எல்லோரா ஓவியக் கூடத்தை எழுப்பினார். 

எழுத்தை, கவிதையை இரு சிறகாய் கொண்டு திரைப்படத் துறைக்குள் நுழைந்தால் என்ன என்கின்ற விஸ்வரூபமான வினாவை என்னுள் அவர் நுழைத்தார். 

எனக்குள் நடுக்கம் பரவத் துவங்கியது. 

திரைப்படத்துறை என்கின்ற பிரம்மாண்ட, அதுவும் தொண்ணூற்று மூன்றுகளில் அதனுடைய பிரம்மாண்டம் ஒரு அந்நிய நபரால்கூட ஊடுருவ முடியாத அரக்கு மாளிகையாய் அன்றைக்கு அது இருந்தது.  

மிகப்பெரிய மேதைகள் கோலோச்சிய காலகட்டத்தில் ஒரு சின்னஞ்சிறுவனாய் எப்படி உட்புகுவதென அடிமனம் வெடவெடத்தது. 

அப்போது நான் கேட்டேன். பதினெட்டு வயது நிரம்பி இருந்த பொழுதில் என்கவிதைகளைத் தொகுத்து எனக்கொரு புத்தகமாய் வெளியிட்டுத் தாருங்கள்..  புத்தகம் எனக்கொரு முகவரி அட்டை!  நான் திரைத்துறையை சந்திக்க தயாராகிறேன் என்று சொன்னேன். 

ஒரு புதிய தமிழ் எழுத்தாளன் புத்தகம் போடுவதென்பது இன்றைய அளவிலும் அவ்வளவு எளிதில் அங்கீகரிக்கப்பட்டு சாத்தியமாக்கப்படக் கூடியது அல்ல என்றால், அப்போதைய நிலையில் ஒரு பெரிய பொருளாதாரச் சுமையை தன் தோளில் சுமந்து என்னுடைய கனவை நிறைவேற்றி என்னுடைய இந்தச் சிப்பிக்குள் என்கின்ற நூலை சிற்பி பாலசுப்பிரமணியம், சேவற்கொடியோன், பாவேந்தரின் மகனார் மன்னர் மன்னன் ஆகியோர் தலைமையிலே நூல் வெளியீட்டு விழா என் நண்பர்களின் உற்சாக ஆரவாரத்தில் நிழ்ந்து முடிந்தது. 

அதன்பிறகு, நீண்டதொரு நெடியதொரு போராட்டம்! முட்கிழிசல்களுக்கு இடையே புதிதாய் றெக்கை முளைத்து வெளியேறிய புறாக் குஞ்சாய்  என்னுடைய பயணம் திரைத்துறையை நோக்கி திரும்பியது.  திரு.மருதாசலம், திரு.தன்ராஜ் ஆகிய இரண்டு விளக்குகள் என்னை இயக்குனர்  திரு.பாக்யராஜ் அவர்களை நோக்கி வழிகாட்டின. 

என் ஞாபகப் பக்கங்களை திருப்பிக் கொண்டே வரும்போது, உணர முடிகிற உண்மை ஒன்று உண்டு. 

போராடாமல் வாழ்க்கை இல்லை, நான் போராடாத நாட்கள் இல்லை. போராட்டங்கள் எனக்குப் பழகி விட்டது. போராட எனக்குப் பிடிக்கிறது. 

தொடரும் என் போராட்டங்கள் உங்கள் அன்போடு!


No comments:

Post a Comment