Thursday, 26 May 2011

கீட்ஸ்


மஞ்சள் பறவை எனும் கட்டுரைத் தொகுப்பில் இருந்து...
(சமூகவியலும் அறிவியலும் அழகியலும் கலந்த 24 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு)
(சமூகவியலும் அறிவியலும் அழகியலும் கலந்த 24 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு)
பக்கங்கள் : 200
விலை: ரூ.100
புத்தகம் வாங்க அணுக வேண்டிய முகவரி:
குமரன் பதிப்பகம்
19 கண்ணதாசன் சாலை,
தி.நகர், சென்னை - 17
பேச: 044-24353742 , 24312559
கீட்ஸ்

கொஞ்ச நேரம், விண்ணில் ஒளிவட்டமடிக்கும் நிலாவை இமைக்காமல் பாருங்கள். இரண்டொரு நிமிடம் சென்ற பின்பு நிலா கண்ணுக்குள் ஊறிப்போய் வெளிச்சம் பொங்கி வழிய ஆரம்பிக்கும்.
இப்போது கண்களில் ஒரு ஈரப்பசை கூட ஏற்படலாம். கண்களை இனி இறுக்க மூடிக்கொள்ளுங்கள். கண்ணுக்குள் இருக்கும் இருட்டினுள் நிலா தெரியும்.
அப்படித்தான் கவிதைகளும்‚ ஒரு கவிதையை ஆழ்மனதில் நுகர்ந்து வாசித்தபின் மனம் மூடி சிந்தனை செய்தால் அந்த கவிதையின் உள்ளொளி உதயமாக வேண்டும்.
கீட்சின் கவிதைகள் அத்தகையவை.
ஒரு குழந்தையின் அன்பை மாதிரியான இயல்புணர்வு மிக்கவை கீட்சின் கவிதைகள்.
பூக்களில் மிகக் குறுகிய ஆயுட்காலம் கொண்டது பார்லிப் பூ‚ அது பூத்த ஒரு நிமிடத்தில் உதிரும்.
கவிதை உலகில் கீட்சும் ஒரு பார்லிப்பூவே‚ 26 வயசில் மீசை முகத்தில் முளைத்த பிராயத்தில் மூச்சுக் காற்றுக்கு காலத்தின் பேனா முற்றுப் புள்ளி வைத்துவிட்டது.
மரணத்தோடு மல்யுத்தம் செய்தோர் பலருண்டு. மரணங் கண்டு மந்தகாசம் செய்த சிலருள் கீட்சும் ஒருவன்.
அச்சின்னஞ்சிறு புறாவின் கழுத்தில் இரண்டு இரும்பு குண்டுகள் இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகளை காப்பாற்ற வேண்டிய கடமைகள் அவை.
கடலுக்குள் சில இடங்களில் எரிமலை வெடிக்கிறது. ஆனால் கடல் குறைந்த அலைகளையே கரையோரம் குவிக்கிறது.
கவிஞனும் அத்தகையவனே!
அவன் வாழ்வில் பல முட்களின் ஸ்பரிசங்கள் இருப்பினும் அவன் உணர்வுகள் ரோஜாச் செடிகளையே சிந்திக்கின்றது.
கீட்ஸ் ஒரு முறை மரத்தடி ஒன்றுக்கு வந்தான். அதில் ஒரு நீரோடை‚ மரத்தின் உரு நீரோடையில் தெரிகிறது. காற்று வந்து மரத்தின் கூந்தல் கோதிவிட, தன் முகம் பார்க்கிறது மரம்.
இரண்டையும் பார்க்கிறான்.
மரத்தைப் போய் அணைத்துக் கொள்கிறான். அதன் மடியில் தலைசாய்த்துக் கொண்டான். நதியின் மடியில் கால் போட்டுக் கொண்டான். பேருந்தில் அம்மா மடியில் தலைசாய்த்துக் கொண்டும் அப்பாவின் மடியில் கால் போட்டுக் கொண்டும் தூங்கிப் போகும் குழந்தை மாதிரி சயனித்துக் கொண்டான்.
மரத்திலிருந்து சிறு பூக்கள் சிதறின. ஓரிரு பூக்கள் அவன் விழி மேல் விழுந்தன. இமை மூடி பூவை கண்ணில் தாங்கினான்.
அவன் இதயத்தை அழுத்திய சுமை, கரைக்கு வந்த நீர்மூழ்கிக் கப்பலாய் மேலே கிளம்பி வருகிறது. கண்களில் ஜில்லென்று சில்லிட்ட சிறுதுளிக் கண்ணீர் துளிர்க்கிறது. அது அவன் கன்னம் வழி இறங்கி கீழே சொட்டி உலர்ந்தது. கண்ணீர் விழுந்து உறைந்த இடத்தை பார்த்தான். அதில் அவன் காதலி பேனி ப்ரவ்னி தெரிகிறாள்.
அவன் சுவாசத்தின் உன் பிரிகிறது. காற்றழுத்தம் பனிகால உதடு போல் அவன் கோடை காலத்தில் அவன் உதடு உலத்தினான். மனுசு பாளம் பாளமாய் வெடிக்கிறது. வெடிப்புகளில் எல்லாம் பேனி ப்ரவ்னி.
காதல் எனும் ஆகுதியின் கீழ்தான் இன்னும் ஆதவனே எரிகிறது. காதல் கவிதைகள் பொதுவாக அதீத கற்பனை தழும்பி வழிவதாகவே இருக்கும். ஆனால் அதன் உள்ளீட்டில் துப்பறிந்தால் சுத்த சோகமே செத்து மிதக்கும்.
காதலி பேனி ப்ரவ்னியை எண்ணுகிறான். அவளை எண்ணாத நொடிகள் இல்லையெனினும், கவிதையாக அவளை எண்ணுகிறான். அவள் பிரிவு அவன் கண்களில் அச்சுலையில் சூடு ஆறாத ஊசிகளை இறக்குகிறது. அருவில் மரமும் நதியும், அவனையும் அவளையும் இணைத்து எழுதறான்.
ஏ... மரமே!
இது டிசம்பர் இரவு!
வசந்த காலத்தில்
உன் மீதிருந்த
வனப்பு இப்போதில்லை!
பசுமை இல்லை
பூக்கள் இல்லை
குயில்கள் இல்லை
எனினும் மரமே நீ
மகிழ்ச்சியில்லாமல் இல்லை!
ஏ... நதியே!
இது டிசம்பர் இரவு!
வசந்த காலத்தில்
உன் மீதிருந்த
வாலிபம் இப்போதில்லை!
அழகு இல்லை
ஆரவாரம் இல்லை
எனினும் இப்போதும் நீ
இனிமையை முணுமுணுத்துக் கொண்டேதான்
ஓடுகிறாய்!
ஏ.. மனமே!
மரமும் நதியும் போல்
யுவதியும், வாலிபரும்
மாறி விட்டால்...
கடந்த கால வசந்தங்களை
எண்ணிக்
கண்ணீர் வடிக்காது
காலம் கழிக்கலாமே..!
கீட்சின் கண்கள் சிரிக்கின்றன. இப்போது என் கண்களோ சேர்ந்து சிரிக்கின்றன. ஒருவர் உதட்டில் சிரிப்பைக் கண்டால் பதிலுக்கு நாமும் சிரிப்பது என்பது நாகரீகம் மாதிரியே, ஒருவர் கண்ணால் சிரிப்பது கண்டதும் நாமும் கண்களால் சிரிப்பது. கண்கள் சிரிப்பது என்றால் அழுகை.

இசை என்பது யாதாகப் பட்டதெனில், மனிதனை மனிதனாகத் தன்னை உணரச் செய்வதற்கானதோர் ஏற்பாடு‚ இருட்டு வானில் நிலா ஆலாபனை செய்துக் கொண்டிருக்கும். ஒருசில பனித்துளிகள் மட்டும் அவசரப்பட்டு ப+மியில் சொட்டிக் கொண்டிருக்கும்.
மொட்டை மாடியில் கொசுக்களும் இல்லாத் தனிமையில் ஒரு பாய் போட்டு தாகமெனில் குடிக்க ஒருவேளை நீர் கொணர்ந்து கொண்டு, தலைக்கோர் தலையணை, காலுக்கோர் தலையணை, கட்டிப்பிடிக்க ஒரு தலையணை என சயனித்துக் கொள்வோம்.
இப்போது ஒரு இசையை அது புல்லாங்குழலாகவோ அல்லது வயலினாகவோ அல்லது வீணை ஒலியாகவோ அல்லது வேறு எவ்வித உணர்ச்சிக்கும் தள்ளி விடாத சினிமா பாடலாகவோ அது இருக்கலாம்.
செவி குளிர இசை பாய்ந்து இதயத்தை சென்று ரம்மியம் செய்யும். மழை பெய்த நிலம் போல மனம் பளிச்சென சில்லிடும்.
கீட்சுக்கும் இம்மாதிரி இசை ரசிக்கும் பழக்கம் இருந்திருக்க வேண்டும். இசை ஒரு அற்புதமானது என்பதை அவன் உணர்ந்திருக்க வேண்டும்.
இசை என்பது தேடிச் செல்ல வேண்டியதில்லை. அது நம்மைத் தேடி நகர்ந்து வரும். அது தான் இசையின் தனிச்சிறப்பு.
அமைதியாக மனசைத் தாழ்ப்பால் போட்டு சாத்திக் கொண்டு மூச்சு விடும் சப்தமும் காதில் ஒலிக்காதபடி ஓரிடத்தில் இருக்கலாம்.
எங்கிருந்தோ ஒரு குருவி சிறகடிக்கும், இது ஒரு இசை‚ தண்ணீர் குழாயில் நீர் தாளம் மாறாமல் தளக்தளக் எனச் சொட்டும், இது ஒரு இசை!
துணி காயப்போட்ட ஒரு படபடப்பை படம் கத்தும், இது ஒரு இசை‚ ஜன்னல் வழி காற்று வந்து மேஜை மீது காகிதங்களைய் புரட்டி நாள்காட்டியைச் சுற்றி வளைக்கும், இது ஒரு இசை!
சாலையில் ஏதோ ஒரு வாகனம் விர்ரென்று சப்தமிட்டு, பிறகு விர்...ரெ..ன்..று ஒலி குறைத்து மறையும் இது ஒரு இசை!
இங்ஙனமாய் உலவச் சின்னம் முழுக்க இசை பொங்கி நிரம்பி வழிகிறது.
கீட்ஸ் இது பற்றி தம் அபிப்ராயத்தை ஒரு தட்டின்மேல் எழுதுகிறான்.
நாம் இதுவரை சந்தித்த
இசையெல்லாம்
இனிமையானதே...!
ஆனால்
அவற்றையெல்லாம் விட
இனி கேட்கப் போகிற
இசை
இன்னும் இனிமையானதாக இருக்கும்!
கீட்ஸ் இசை பற்றி மற்றொரு உயர்வாய் மிதந்து ஓட்டிக்கொண்ட கருத்தொன்றைக் கூறுகிறான்.
சுகமான இசை
சோகமான இசையே!
கீட்ஸ் இன்னொரு கவிதை எழுதுகிறான். கிட்டத்தட்ட அது புறநானூறு போல் துவங்குகிறது. ஆனால் அகநானூற்றில் போய் முடிகிறது.
கவிதைக்குள்ளே வேறுவேறு எண்ணங்கள்.. வேறுவேறு உருவ உணர்ச்சிகள் எல்லாம் கிரகங்கள் மாதிரி‚ தனித்தனியே தத்தமது பாதைக்கேற்ப சுற்றி வரும். ஆனால் அனைத்துமே காதல் எனும் சூரியனையே சுற்றிவரும்.
காதல் ஒரு கவிஞனுக்கு எவ்வகையிலிருந்தோ ஒளி பாய்ச்சுகிறது. அதன் ஒளிவீச்சில்தான் கவிஞனுடைய அடைத்து வைக்கப்பட்ட உணர்ச்சிகளுக்கும் உருப்பு மாரிய மின்னல்களின் பிரகாசம். மின்மினிகளின் ஊர்வலம்‚ மின்சாரங்களின் அணிவகுப்பு!
கீட்ஸ் முழுக்கமுழுக்க காதலால் நெய்யப்பட்ட கவிஞன்‚ அவன் கண்களின் சிடாட்யின் காதல். இதயத்தின் துடிப்பிலும் காதல்!
காதல் என்றதுமே காதலியைக் காதலிப்பதுதான் காதல் என்று அல்ல.
அன்பின் அந்த வெளிப்பாடும், நேசத்தின் நிறை இசை இதயத்தை தாண்டிய பார்வையுமே காதல்!
ஒரு தாயின் மீதும் காதல் கொள்ளலாம். ஒரு பூவின் மீதும் காதல் கொள்ளலாம்.
நட்பு ஒரு வகை காதல். தாய்மை ஒருவகை காதல் காமம் ஒரு வகை காதல்.
காதலின்றி ஜெகமில்லை என்று கர்ஜிக்க காரணிகள் இவைகளே.
போர் வீரனே..
முகத்தை தழும்புகளால்
அலங்கரித்து கொண்டவனே!
துயரங்களின் மறுபதிவாய் - நீ
தயங்குவதன் காரணம் என்ன?
அறுவடை முடிந்து விட்டது.
அணிலின் நெற்களஞ்சியமும்
நிரம்பி வழிகிறது
நீ சோர்ந்திருக்க காரணமென்ன?
எனத்துவங்கி பயணம் போகிறது கவிதை. வீரனே என்ன சோர்வோ என்று பெரிய
ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. காரணம் காதலாகத்தான் இருக்கும். ஆனால் இக்கவிதையில் கீட்ஸ் ஒரு உவமை கூறியுள்ளான். அதுதான் ஆழ சிந்திக்க வேண்டியுள்ளது.
‘அறுவடை முடிந்து விட்டது
அணிலின் நெற்களஞ்சியம் கூட
நிரம்பி வழிகிறது
நீ சேர்ந்திருக்க காரணமென்ன” என்று வினவுகிறான். இதில் அணிலின் நெற்களஞ்சியம் நிரம்பி வழிகிறதென்கிறான். நெற்களஞ்சியம் நிரம்ப ஒரு விவசாயியை உவமையாக்கலாம். ஒரு ஏழைக் குடியானவனை உவமையாக்கலாம். வேறு பறவைகளை உவமையாக்கலாம்.
ஆனால் அணிலை உவமையாக்க என்ன நோக்கம்?
அணில் ஒரு அஹிம்சாவாதி. அதன் கண்களை கவனியுங்கள் அதில் எப்போதும் ஆசிரியனைப் பார்க்கும் மாணவக் குழந்தையின் பார்வையே ததும்பும்.
பொதுவாகவே அனைத்து உயிரினமும் உணவு சேமிக்கும். ஆனால் அணில் சேமிக்கையில்தான் பிற முதலாளித்துவம் தலை நீட்டும்.
அணில் உணவு சேமிக்கும். ஆனால் பறவைக் கூட்டம் அவற்றை பறித்துப் பங்கிட்டுக் கொள்ளும். பிறகு குரங்கு இனம் அவற்றைக் குதறி சிதறடிக்க. பிறகு எஞ்சியவற்றை எறும்புகள் கொள்ளையிடும்.
அணில்கள் சேமிப்பும் உணவு மட்டும் எல்லோருக்கும் பொதுவாகிவிடும். அதனால்தான் அது சதா எக்காலத்திலும் உணவு தேடுகிறது. மற்ற உயிரினங்கள் உணவு சேமிப்பில் கால நிர்ணயம் கொண்டுள்ளன. ஆனால் அணில் அங்ஙனமில்லை. அது எக்காலத்திலும் உணவை தேடி வாழும். அப்படிப்பட்ட அணிலின் நெற்களஞ்சியமே நிரம்பி வழிகிறதாம்.
அப்படியானால் அணில் நெற்களஞ்சியத்தை முறையிடும் மற்ற உயரினங்களின் நெற்களஞ்சியமும் நிரம்பியிருக்க வேண்டும். அப்படியானால் அந்த அளவு நாட்டில் அறுவடை மகசூல் நிரம்பியுள்ளது.
‘இருப்பினும் உனக்கேன் வீரனே சோகம்” என்று விலை மதிப்புள்ள ஒரு வினாவை எழுப்புகிறான். ஆனால் அதனினும் விலை மதிப்புள்ள பதிலாக ‘காதல்” என்பதையும் கீட்சே கூறி கவிதையை முடிக்கிறான்.
ஆசை இல்லாத மனிதனே இல்லை. இருக்கவும் கூடாது. ஒரு மனிதன் வளர்ச்சியடைவதே ஆசையால்தான்.
துறவரம் என்பது கூட ஒரு வகை தப்பித்தல். இல்லறம் என்பதே போராட்டத்திற்கான ஆயத்தம். ஆசைகளே மனிதனை இயக்குகின்றது. ஆசை இல்லாவிட்டால் மனிதன் ஒரு மரம்போல் ஓரிடத்திலேயே இருந்திருப்பான்.
வானத்தின் நீள அகலங்களின் புள்ளி விவரங்கள் அவனுக்குத் தேவைப்பட்டிருக்காது. பூமியின் எடை உணர்ந்திருக்க மாட்டான். செவ்வாய் கிரகம் தாண்டி மனிதப் பார்வை தீட்சண்யமுற்று சென்றிருக்காது.
ஓசை இல்லாத கடலா? ஆசை இல்லாத கவிஞனா?
கீட்சும் ஆசை கொள்கிறான்.
பூமிக்கடியில் நெடுங்காலமாய்
புதைக்கப்பட்ட திராட்சை மதுவை
விரும்புகிறேன்.
கிராமத்தில் எழில்கூடி
அரும்பிய மலர்களை அடைய
விரும்புகிறேன்.
பிரான்சு நாட்டின்
பாடல், நடனம் ரசிக்க
விரும்புகிறேன்.
கண்ணாடிக் குவளையை
சிவப்பாக்கும் மதுவை
விரும்புகிறேன்.
மாதுவுண்ட பின்
எவர் கண்ணிலும் படாமல்
மறைந்து விட விரும்புகிறேன்.
அப்படியே கானகத்தில் வாழும்
உன் போன்ற நிலை அடைய
விரும்புகிறேன்.
உன் போன்ற நிலையென்று கீட்ஸ் சுட்டிக் காட்டுவது. வானம்பாடியை‚
பூமிக்கடியில் நெடுங்காலமாக புதைக்கப்பட்ட மதுவில் அதிக போதை கிட்டும். மிகுந்த சுவையுடையதாகவும், துவர்ப்புத் தன்மை நீங்காத நறுமணம் கூடியதாகவும் இருக்கும் என்பதால் அதை விரும்பினான்.
மலர்களை விரும்புகிறேன் எனக் கூறினாலும் கிராமத்து மலர்களை விரும்புவதாக கூறுகிறான். இதில் என்னவொரு முன்ஜாக்கிரதையோடு அவன் கூறியிருக்கிறான். நகரத்தில் மங்கைகளும், மலர்களும் எப்போது வேண்டுமானாலும் ஏமாற்றி விடுவார்கள். மலர்களில் நகரத்தில் காகிதங்களில் கூட உள்ளது. அதனாலேயே கிராமத்து மலர்களை விரும்பினான்.
பிரான்சு நாட்டின் நடனம், பாடல் விரும்புவதாக கூறுகிறான். தன் இனமொழி பக்தியை இங்ஙனமாய் அறிவித்துள்ளான்.
மதுவை கண்ணாடிக் குடுவையில் ஊற்றுகிறான். பின்பு அந்தக் கண்ணாடிக் குவளை மதுவின் சிவப்பு நிறம் கொள்கிறது. மது குடித்தால் கண் சிவக்கும். மது உற்றினால் கண்ணாடி குடுவையும் சிவக்கிறதே” என எண்ணுகிறான். மதுவின் சுவையை ரசித்தவன் உள்ளான். ஆனால் கீட்ஸ் மதுவின் அழகை ரசித்துள்ளான்.
மது குடித்தப்பின் உலகை விட்டே மறை என்கிறான். பிறகென்ன? துன்பமும் தொடர்ந்து வரும். துரோகமுமான உலகில் ஒரு சுயமரியாதைக் கவிஞன் வாழ சம்மதிப்பானா?
கடைசியில் ஒரு மின்னல் முற்றுப்புள்ளியாய் ‘வானம்பாடியே உன் போன்ற நிலையை அடைய விரும்புகிறேன்‚” என்கிறான். இதுதான் சரியான தேர்வு. பறவை போல் வாழ்வு வாய்த்தால் அற்புதமாக இருக்கும்‚
போராட்டம் இல்லாத உயிரினம் இல்லை. ஆனால் பறவையின் வாழ்வில் கண்ணீர் அழுகை இல்லை. இந்த ஒரே ஒரு காரணத்திற்காகவே பறவையாகிவிடலாம்.
கீட்ஸ்னுடைய மேற்கூறிய கவிதை வானம்பாடி நைட்டிங்கேல் என்ற இது மிக பிரசித்தி பெற்ற ஒன்றாகும். வானம்பாடியோடு கீட்ஸ் பேசுவது போல் அமைந்ததே இக்கவிதை.
அழகியல் உணர்ச்சியை நரம்பொங்கும் ஓடவிட்டுக் கொண்டுதான் கீட்ஸ் இக்கவிதையை எழுதியிருக்க வேண்டும்.
வானம்பாடியை நோக்கி கீட்ஸ் சொல்கிறான். இவ்வுலகம் உனக்கு ஏற்றதாக இல்லை போய்விடு பறவையே என்று அவன் எழுதுகிறான்.
‘என் செல்லப் பறவையே!
சென்று விடு
சென்று விடு
தாமதிப்பாயnனில்
உன்னைத் தொடர்ந்து
நானும் வருவேன்”
மதுவின் மூலம் அல்ல.. பின் எப்படி..? கீட்ஸ் வானம்பாடியை நோக்கிப் பறந்து வருவதாகக் கூறுகிறான். இங்கேதான் கீட்ஸ் தன்னை, கவிஞன் என்ற ஸ்தானத்திலிருந்து எந்த நொடியும் தன் வாழ்வில் கீழிறங்கவில்லை என்பதை நிரூபிக்கிறான்.
‘உன்னைத் தொடர்ந்து
நானும் வருவேன்
மதுவின் மூலம் அல்ல..
என் கவித்துவத்தின்
கண்ணுக்குத் தெரியாத சிறகுகள்
உன்னருகே என்னைக்
கொண்டு வந்த சேர்க்கும்”
கீட்ஸிடம் இருந்து இன்னொரு கவிஞன் கற்றுக் கொள்ள வேண்டியது இந்த உணர்;ச்சியைத்தான்‚ எந்த நிலையிலும் எந்த இடத்திலும் எந்த வாழ்வியல் சூழலிலும் எதைப் பார்க்கினும் எது வந்து தாக்கினும், தான் கவிஞன் என்ற நிலை மறக்கலாகாது‚
கீட்ஸ் இப்போது அடிக்கடி நோய் வயப்படுகிறான். அவன் தன் நோய்க்;கு மருந்தாக எழுத்தையே அhப்;பணிக்கிறான். மருந்தை உட்கொள்வதே வழக்கம். ஆனால் கீட்ஸ் எழுத்தை மருந்தாக உட்கொள்வதன் மூலம் வாழ்வின் பயனை அடைவதாக உணருகிறான்.
மரணம் வந்து அவன் விலாசம் விசாரிக்கிறது. கீட்ஸ் மரணத்திடம் ஒரு மனு போடுகிறான். ‘தன்னுயிரை வதைத்துப் பறிக்காமல் எடுத்துப் போ’ என்று‚
‘ஏ.. மரணமே‚
என் காற்றை (மூச்சை)
காற்றோடு காற்றாக
எடுத்துச் சென்று விடு”
எவ்வளவு வலிமையான விண்ணப்பம். இந்த விண்ணப்பத்தை மரணம் வாங்கி நம்மந்திரிகள் மாதிரி குப்பைத் தொட்டியில் விசிறி விடவில்லை. பரிசீலனை செய்தது.
‘மரணமே
உன்னை முழுமனதோடு ஏற்க
என்னுள்ளம் விழைகிறது”
என்னப்பா இது மரணத்தை ஏதோ காதலியை அடைவது போல ஆனந்தமாய் அடைவேன் என்கிறாயே..‚ மரணத்தின் நிமிஷத்திலும் - கீட்சின் வானம்பாடியின் நிறை போகவில்லை.
அப்படிப்பட்ட பெரிசுகளுக்கு காசை தண்ணீரில் கறைத்து வாயில் ஊற்றுவார்கள்‚ உயிர் பிரியும்.
கீட்சுக்கு வானம்பாடி ஆசை!
‘வானம்பாடியே
நான் மரித்தபின்
புல்தரையாக இருந்து
உன் மீட்பை கோருவேன்”
என்ற மனத்திடமுள்ள கவிஞனாக அவன் இருந்திருக்க வேண்டும்.
கீட்ஸ் தன் வானம்பாடிக் கவிதையினை நிறைவு செய்கிறான். அது எந்த இரும்பு நெஞ்சையும் தொடும்.
‘வானம்பாடியே
விடை பெறுகிறேன்
உன் குரல் தேய்ந்து வருகிறது”
இது கனவா
நான் விழித்திருக்கும் என்
மயக்க நிலையா?
உன் குரல் மறைந்தே விட்டது‚
ஆமாம் நான் விழித்திருக்கிறேன்.
அதாவது
தூக்கத்தில் ஆழ்ந்திருக்கிறேனா?
விழிப்பா-உறக்கமா என்று புரியாத ஆழ்ந்த தியானம் குரலைக் கேட்டிருக்கிறான் கீட்ஸ்.
நீ அறியாக் குரல் கொண்டோய் என்கிறான்.
கீட்ஸின் கனவுகளும் வானம்பாடியின் குரலைப் போன்றதே!

2 comments:

  1. மிக நல்ல கட்டுரை...வாழ்த்துக்கள் உங்களுக்கு.

    ReplyDelete
  2. அருமையான படைப்பு...என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என்றென்றும் உங்களோடே பயணிக்கும்....:)

    ReplyDelete